களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் உயிரிழந்த சம்பவம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தக் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
”மனித உணர்வற்ற முறையில் கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு 9 வயதில் தனது மக்களின் உயிர் இந்த உலகை விட்டு பிரியுமென சிறுமியின் தாயும் தந்தையும் கனவில்கூட நினைத்திற மாட்டார்கள்.
இவ்வாறான மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அனுமதி அளிக்க கூடாது. இது ஒரு சமூகப் பிரச்சினையாகும். விரைவாக இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். அத்துடன் ஐதேகவின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனவின் கவனத்துக்கும் இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ளேன்.
இசம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமரை கூறியதுடன், விசாரணைகளை முடிந்தளவு விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். குழந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்தப்படுவார்கள்” – எனவும் அவர் கூறியுள்ளார்.