இலங்கைக்கு உழைப்பாளர்களாக வந்த மலையக மக்களை ஒன்றுபட்ட தொழிற்சங்க அரசியல் சக்தியாகவும் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால், ஒரு சிலரின் போக்கு ஒற்றுமை நோக்கியதாக இல்லாதிருந்தமையால் காலத்திற்கு காலம் பிரிவுகளும் பிளவுகளும் தோன்றின.
அறுபதுகளில் அஸீஸ் பிரிந்து ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார். அவரோடு அமைச்சர் மனோகணேசனின் தந்தை வி.பி. கணேசனும் இணைந்தார். அதே அறுபதுகளின் நடுப்பகுதியில் வி.கே.வெள்ளையன் வெளியேறினார். தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தாபித்தார்.எண்பதுகளின் இறுதியில் பெ.சந்திசேகரன் வெளியேறினார். மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்தார். இப்படி காலத்திற்கு காலம் ஒரு குழுவில் இருந்து பிரிந்து வந்தபோதும் இன்று காலத்தின் தேவை கருதி இந்த மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஐக்கியத்துடன் செயற்பட ஆரம்பித்தது.
அதுவே இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியாக முன்னோக்கிச் செல்கிறது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தனது மேதின உரையில் தெரிவித்தார்.
தலவாக்கலை நகரசபை மைதானத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் தலைமையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
தலவாக்கலை நகரம் மலையக அரசியலில் மறக்க முடியாத களம். இங்கே பல புரட்சிகளை கொண்டுள்ளோம். அண்மைய காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வந்து ஐம்பதினாயிரம் தனி வீடுகளுக்கான ஒப்புதலை இந்த மேடையிலே பெற்றுக்கொண்டோம். ஜனாதிபதியை அழைத்து வீட்டுரிமை காணிக்கான உறுதிகளை வழங்கி வைத்தோம்.
இவையனைத்தும் எமது கூட்டணி போராளிகளின் ஒற்றுமையின் பலம். அதனால்தான் எல்லோரும் மேதினப் பேரணி நடாத்தும்போது நாம் ஓரணியாக தலவாக்கலையில் திரண்டிருக்கிறோம். எதிர்வரும் நாட்களில் பாரதப்போர் பிரதமரையும் இந்த ஓரணியான ஒற்றுமையினால் வரவேற்கவிருக்கின்றோம். அவரை தனித்து சந்திக்கும் போவதாக சிலர் அறிக்கைவிடுகின்றனர். உண்மைதான் மக்கள் எல்லாம் தமிழ் முற்போக்கு கூட்டணி பக்கம் நிற்கையில் அவர்கள் தனித்துத் தானே நிற்கவேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமைமிக்க செயற்பாடுகளால் இன்று தேசிய எல்லைகளைக் கடந்து இந்தியாவின் கவனத்தையும் என்றுமில்லாதவகையில் பெற்றுள்ளோம். எமது அடுத்த இலக்கு சர்வதேசங்களை நோக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தலவாக்கலை நிருபர்