சிவனொளிபாதமலை புனித பூமியில் வீசப்படும் கழிவுப் பொருட்களால் மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்.

0
84

சிவனொளிபாத புனித பூமியில் யாத்திரியர்களால் எறியப்படும் குப்பை கூலங்களால் புனித பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சிவனொளிபாதமலை பருவ காலம் ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பிரயாணிகள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.

இவ்வாறு சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக வரும் உள்நாட்டு யாத்திரியர்கள் தங்களால் கொண்டு வரப்படும் பிளாஸ்ரிக் போத்தல்கள் பொலித்தீன்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகிய கழிவுகளை கண்ட இடங்களில் வீசுவதனால் இன்று பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக புனித பிரதேசங்கள் நீரோடைகளிலும் நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு பொருட்கள் வீசுவதனால் நீர் அசுத்தமடைந்து இந்த நீரினை பயன்படுத்தும் மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா தொடக்கம் நல்லத்தண்ணீர் வரை வீதியின் இரு மருங்கிலும் கண்ட இடங்களில் உணவு பொருட்களையும் கழிவு பொருட்களையும் வீசுவதனால் இதனை உண்பதற்காக காட்டுப்பன்றி, குரங்கு ,மற்றும் சிறுத்தை போன்ற மிருகங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி படையெடுப்பதாகவும், வீதியில் இரவு நேரங்களில் உணவு உண்பதற்காக வன விலங்குகள் வீதிக்கு வருவதனால் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது மாத்திரமின்றி பொலித்தீன் உள்ளிட்ட நச்சுப்பொருட்களை மிருகங்கள் உண்பதனால் அவற்றின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளன.
நீர் நிலைகளில் எறியப்படும் குப்பைகள் காரணமாக நீரூற்றுக்கள் வற்றிப்போகும் நிலை காணப்படுகின்றதுடன் நீர் அசுத்தமடைகின்றன.

சுற்றுப்புற சூழலில் எறியப்படும் குப்பைக் காரணமாக புனித பிரதேசத்தின் புனிதத்தன்மை கெடுவதுடன், எமது பிரதேசத்திற்கு உரித்தான தாவரங்கள் உயிரினங்கள் அழிவடையக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுகின்றன.
குறித்த குப்பையினை அகற்றுவதற்காக பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதற்காக பெரும் மனித வள மற்றும் பணம் செலவிட வேண்டிய நிலை ஒவ்வொரு வருடமும் காணப்படுவதாகவும் இதனால் பாரிய நிதி செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குப்பைகளை இடுவதற்காக பல இடங்களில் குப்பைத்தொட்டில்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் யாத்திரியர்கள் அதில் போடாது கண்ட இடங்களில் வீசுவதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே புனித பூமியின் தூய்மையினை பாதுகாப்பதற்கு கண்ட இடங்களில் குப்பைகளை வீசாமல் உரிய இடங்களில் குப்பையினை போடுமாறும் பலரும் கேட்டுக்கொள்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here