
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அமுல்படுத்தியிருந்தார்.
கடந்த 9-ம் திகதி முதல் அந்த வரிவிதிப்பு அமுலாக இருந்த நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.
பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்தான் அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனாவின் புதிய நடைமுறைகள் அமுலுக்கு வரும்போது, அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது.
சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம், யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற கனரக அரிய மண் தாதுக்கள் அடங்கிய ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது.
எனவே ,சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.