சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பாரா என்று ஐக்கிய தேசியக்கட்சி சவால் விடுத்துள்ளது.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவினரையே பொது வேட்பாளராக நிறுத்தி வாக்குகளை குடும்ப அங்கத்தவர்களிடையே சேமித்துக் கொள்வதே அவர்களது பிரதான இலக்கு என்று தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வேறு நபர்களை வேட்பாளராக களமிறக்குவதற்கான சந்தர்பத்தை அவர்கள் வழங்கவும் மாட்டார்கள் என்றும் கூறினார்.
நுவரெலியா இராகலையில் 01.07.2018 அன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்ற முக்கியமான விடயம்தான் ராஜபக்சவுக்கு சீன நிறுவனமொன்றினால் 7.6 மில்லியன் டொலர்கள் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்.
7.6 மில்லியன் டொலர்கள் என்பது மிகப்பெரிய பணம். அப்படியென்றால் ஏன் சீன நிறுவனம் ராஜபக்சவுக்கு பணம் வழங்கியது? எமக்கு அப்படி பணம் வழங்கப்படவில்லை. அன்று வெள்ளையர்களின் ஆட்சியாக எமது நாடு விளங்கியது. ஆனால் இன்று சீனாவின் ஆட்சியாக எமது நாடு ஆகிவிட்டதா என்பதே எமது கேள்வியாகும்.
ராஜபக்ச என்பவர் எமது நாட்டில் சிறந்த தலைவராகவும், யுத்தத்தை நிறுத்தியவராகவும், பல பணிகளை செய்தவராகவும் விளங்குவதால் அவருக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தும் சொல்லை நான் கூறமாட்டேன். ஆனாலும் சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் சத்தியக்கடதாசி மூலம் கூறுவாரா?
அப்படியென்றால்தான் அவ்வாறான பணம் பெறப்படவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றி பேசுகிறார்கள். குறைபாடுகள் அதில் இடம்பெற்றதோடு ஊழலும் இடம்பெற்றதை ஏற்கின்றோம். ஆனால் இந்த அரசாங்கம் முதன்முறையாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து அந்த மோசடியில் ஈடுபட்ட பிராதன சந்தேக நபர்களை சிறைப்படுத்தியதை இங்கு கூறவிரும்புகிறேன்.
ஆனால் ராஜபக்சவின் ஆட்சி இன்றிருந்திருந்தால் இப்படி இடம்பெற்றிருக்குமா? இல்லை. ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாயிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். மிகவிரைவில் அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கின்றோம்.
கோட்டாபயவா, பெசில் ராஜபக்சவா, நாமல் ராஜபக்சவா, ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்சவா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கப் போகின்றார்கள் என்பது இன்றைய சமூக கலந்துரையாடலாக மாறிவிட்டது. வேறு யாரும் இல்லையா இவர்களை விட? எமக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேட்கின்றார். யாருக்கும் அவர்கள் சந்தர்ப்பத்தை வழங்கமாட்டார்கள். குடும்பத்திற்குள்ளேயே வாக்குகளை சேமித்துக்கொள்வதே அவர்களது இலக்காகும் என்றார்.
(க.கிஷாந்தன்)