சீரற்ற காலநிலையினால் நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் பாதிப்பு!

0
172

மலையகத்தில் 21.05.2018 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் அட்டன் பூல்பேங்க் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. 21.05.2018 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருந்த குன்றில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், மண்சரிவு ஏற்படும் சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் வௌிநாடு சென்றுள்ளதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு பலத்த அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Panmoor Road Slip (2) Norwood House Flood (2) Kotagala House Flood (1) Hatton House Damage (2) Hatton House Damage (1)

இதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை லொக்கில் பிரதேசத்தில் உள்ள 12 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

21.05.2018 அன்று பெய்த கடும் மழை காரணமாக இந்த பகுதியின் ஊடாக ஓடும் மகாவலி ஆற்றின் கிளை ஆறான கொட்டகலைஓயா பெருக்கெடுத்ததினாலேயே இந்த வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் வெள்ளம் வடிந்துள்ளதால் வீடுகளில் நிறைந்துள்ள நீர் மற்றும் சேற்றை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததனால் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள 46 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதில் அதிகளவாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் நோர்வூட் முஸ்லீம் பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு அட்டன் – எபோட்சிலி பிரதான வீதியில் பன்மூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் பல மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. எனினும் தற்பொழுது மண்சரிவு அகற்றப்பட்டு பாதை வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20.05.2018 அன்று பி.ப. 2.00 மணிமுதல் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழையினால் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் தங்ககலை, ஹென்போல்ட், ஸ்டொனிக், லிந்துலை ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச செயலாளர் திருமதி. சுஜீவா போதிமான்ன தெரிவித்தார்.

இவர்களுக்கான உணவு, உடை, தங்குமிட வசதிகள் யாவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் தொடர் மழையினால் நுவரெலியா பிரதேசத்தில் பல விவசாயக் காணிகள் சேதமடைந்துள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

க.கிஷாந்தன்


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here