ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிறுபான்மை மக்களை அனைத்துக் கொண்டு செல்வதில் பெரும் அக்கறை செலுத்தி வந்தது.அதற்கு காரணம் சிறுபான்மை மக்கள் அவர்களை விட்டு சற்று விலகியிருந்ததே.ஆனால் ஜக்கிய தேசிய கட்சியுடன் சிறுபான்மை மக்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவர்கள் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இன்று ஜக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற ஒரு சில அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதில்லை.இதனை நான் எனது அமைச்சிலும் தற்பொழுது உணருகின்றேன்.எனவே இந்த செயற்பாடானது சிறுபான்மை மக்கள் ஜக்கிய தேசிய கட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கும் ஒரு நிலையாகவே நான் கருதுகின்றேன்.
1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மலையக தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்;காகவே ஒரு அமைச்சை ஏற்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்.அதற்கு பிறகு வந்த மகிந்த ராஜபக்சவும் தன்னுடைய முதலாவது ஆட்சிகாலத்தில் பல கோடி ரூபாய்களை வாரி வழங்கினார்.
அவரும் சிறுபான்மை மக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி பொருளாதாரம் கல்வி அபிவிருத்தி சுகாதாரம் என பல்வேறு துறைகளையும் முன்னேற்றம் காண வழி சமைத்தார்.
ஆனால் அவருடைய இரண்டாவது ஆட்சியின் போது ஒரு காலகட்டத்தில் சிறுபான்மையினர் தொடர்பாக அக்கறை செலுத்தாமை காரணமாகவும் அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை காரணமாகவும் தன்னுடைய ஆட்சியில் இருந்து கொண்டே தோல்வியை சந்திக்க நேர்ந்தது.இதனை ஜக்கிய தேசிய கட்சி ஒரு பாடமாக கொண்டு செய்றபட வேண்டும்.
நாங்கள் ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கத்தை ஆட்சிபிடும் ஏற்றினோம்.ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்கின்ற வகையிலேயே சில செயற்பாடுகள் அமைந்துள்ளது.என்னுடைய அமைச்சிலும் இந்த நிலைமை இருக்கின்றது.இதனை நான் வெளிப்படையாகவே கூறுகின்றேன்.
அதற்கு காரணம் இதனை யாரும் கூறவிட்டால் எங்களுடைய உரிமைகள் தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாது.
நாங்கள் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் எங்களுடைய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற பொழுது நிச்சயமாக நாம் அதனை சுட்டிக் காட்ட தயங்க மாட்டோம்.அதற்கு காரணம் எங்கள் மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.எங்களுடைய மக்களுக்காகவே இந்த அமைச்சு பதவிகள்..ஒரு சிலர் நினைக்கலாம் அப்படியானால் ஏன் இவர்கள் அமைச்சு பதவியை துறந்து வெளியில் வரலாமே என்று. அதற்கான நேரம் வருகின்ற பொழுது முற்போக்கு கூட்டணி என்ற வகையில் நாம் சரியான தீர்மானத்தை எடுப்போம்.
நாங்கள் கடந்த மகிந்த ஆட்சி காலத்திலும் அவ்வாறே அமைச்சு பதவிகளை துறந்து வெளியில் வந்தவர்கள்.அன்று மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம்.எனவே ஜக்கிய தேசிய கட்சி சிறுபான்மை மக்கள் தொடர்பாகவும் சிறுபான்மை அமைச்சர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.எங்களுக்கான வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு தயாராக வேண்டும்.ஏனென்றால் எந்த ஒரு ஆட்சியும் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் தொடரமுடியாது என்பதை எமக்கு கடந்த காலங்கள் உணர்த்தியிருக்கின்றது.எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பா.திருஞானம்