சுற்றுப்புற சூழல் என்பது மனிதனுக்கு மற்றுமன்றி உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் மனிதனின் பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக இன்று உலகில் பல்வேறு சூழல் பிரச்சினைகள் தோன்றிவருகின்றன.இது மலையகத்திற்கு மாத்திரம் விதிவலக்கல்ல. இந்த சூழல் சீர்கேடுகளை தடுக்கும் முகமாக உலக சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு சூழலுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் “ஓர் பசுமையான தூய்மையான உலகம்” என்ற தொனிப்பொருளில் நுவரெலியா டீ பீல்ட் சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 27.06.2018 அன்று தலவாக்கலையில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
இப்பேரணியானது தலவாக்கலை நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நகர வீதியினூடாக பேரணி தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திற்கு வந்தடைந்து, அங்கு சூழலை பாதுகாத்தல் தொடர்பான வீதி நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது. இப்பேரணியின் போது சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும், சூழலுக்கு பாதுகாப்பான விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்தனர்.
இதன்போது 100ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதோடு, தலவாக்கலை பொலிஸாரும், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபாலவும் இப்பேரணியில் கலந்து சிறப்பித்தனர்.
(க.கிஷாந்தன்)