செக் குடியரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படும் கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார, விவசாய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது குறித்து விசேட கலந்துரையாடலொன்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் லோஹித் சமரவிக்ரமவுக்கும்(Hon. Counsulate of the Czech Republic-Srilanka ) இடையில் நேற்று பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில்; பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிசத டி சில்வா உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
செக் குடியரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் ஆழமாக ஆராயப்பட்டது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்பட வேண்டிய கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார, விவசாய மேம்பாடுகள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானும் செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் லோஹித் சமரவிக்ரமவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி யோசனைகளுக்கு பூரண ஒத்துழைப்பை செக் குடியரசின் ஊடாக பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.