நுவரெலியா மாவட்டத்தின் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் புகழ் பெற்ற மனங்கவர்ந்த இடமான தலவாக்கலை சென்கிளையார் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுப்பற பகுதியில் நேற்று (05) மாலை இனந்தெரியாத விசமிகள் தீ வைத்ததன் காரணமாக நீர் வீழ்ச்சியினை சுற்றியுள்ள சுமார் 60 ஏக்கர் பற்றைக்காடு தீக்கிரையாகியுள்ளன.
குறித்த பகுதியில் வரட்சியுடன் கடும் காற்றும் நிலவி வருவதனால் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். மலையகத்தில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினை வனப்பிரதேசங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் நீர் நிலைகள் வற்றிப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் வன விலங்குகள் நீரைத்தேடி மக்கள் வாழும் குடியிருப்புக்களை நோக்கி வரக்கூடிய அபாயமும் காணப்படுகின்றன.
காடுகளுக்கு தீ வைப்பதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள பெறுமதிமிக்க மரக்கன்றுகள் சிறிய வகை உயிரினங்கள் எமது பிரதேசத்திற்கே உரிதான மூலிகைச் செடிகள் ஆகியன அழிந்து போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இதே நேரம் தீ வைப்பதன் காரணமாக நீரூற்றுக்கள் அற்றுப்போய் பாரிய குடி நீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றன.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சுற்றுலா பிரதேசங்களில் தீ வைக்கப்படுவதனால் இப்பிரதேசங்களில் இயற்கை அழகு அழிந்து போய் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றலா பிரயாணிகளின் வருகையும் குறைவடையலாம் இதனால் இந்த பிரதேசங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைலாம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மலைவாஞ்ஞன்.