ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் வெறும் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தது மைதானத்தையே அதிர வைத்தது. 184 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன்களைக் குவித்தார். இவரது அதிரடியால் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைப் பெற்றது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று சதம் அடித்ததன் மூலம், சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;
* சென்னை அணிக்காக முதல் முறையாக இந்த சீசனில் கால் பதித்துள்ள சஞ்சு சாம்சன் 2-வது முறையாக சதம் அடித்துள் ளார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர்களான ஷேன் வாட்சன், முரளிவிஜய், ருதுராஜ் கெய்க்வாட் (தலா 2 சதம்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார்.
* ஐ.பி.எல். வரலாற்றிலேயே முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்.
* இதுவரை எந்தவொரு சென்னை அணி வீரரும் ஒரு சீசனில் 2 சதங்களை அடிக்காத நிலையில், பாதி சீசன் முடிவதற்குள்ளேயே சஞ்சு சாம்சன் சென்னை அணிக்காக 2 சதங்கள் அடித்துள்ளார்.
* ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் உள்ளூர் போட்டிகளை சேர்த்து) சாம்சன் இதுவரை 8 சதங்கள் அடித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலி (9 சதம்), அபிஷேக் ஷர்மா (9) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகி சர்மாவுடன் (8 சதம்) பகிர்ந்துள்ளார்.




