சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள்! 2 இலங்கை இளைஞர்கள் கைது!

0
114

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அதில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸுக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் விரைந்து வந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தின் பயணத்தை ரத்து செய்தனர்.

பின்னர் அதில் ஏற்றப்பட்டு இருந்த பயணிகளின் உடைமைகளை இறக்கி சோதனை செய்தனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்களின் சூட்கேசுகளில் மொத்தம் 3 கிலோ 600 கிராம் எடையுள்ள ‘பிரவுன்சுகர்’ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கை வாலிபர்கள் 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். போதைப்பொருளும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இந்திய ரூபா மதிப்பில் ரூ. 6 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்துக்குள் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையை மீறி போதைப் பொருள் கொண்டு வந்தது எப்படி என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இலங்கை வாலிபர்களின் சூட்கேசுகளை சோதனை செய்யாமல் தற்காலிக ஊழியர் ஒருவர் எடுத்து செல்வது தெரிந்தது. அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதான 2 இலங்கை வாலிபர்களின் பெயர், மற்றும் தற்காலிக ஊழியரின் பெயரை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இலங்கை வாலிபர்கள் 2 பேரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு போதை பொருள் கடத்த சென்னை விமான நிலையத்தில் வேறு அதிகாரிகள் யாரேனும் உதவினார்களா? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்?யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here