வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழு கூட்டம்
03/05/2018 அன்று இடம்பெற்ற ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன..
செயலாளராக இணையத்தின் பிரதித் தலைவரும், ஸ்தாபக செயலாளருமாகிய திரு. ஜெ. நிரோஷ்காந்த் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்து வருடங்களுக்கு முன்னர் எம்மால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் செயலாளர் பதவியை மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகவும், செயலாளர் என்ற வகையில் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காக இணையத்தை முன்னோக்கி நகர்த்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தின் இடையே, ஜனநாயக இளைஞர் இணையத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை, தெமட்டகொடை வட்டார வேட்பாளர் திரு. பாலையா பாலசுந்தரம் இணைந்து கொண்டார்.
இவருக்கான அங்கத்துவ நியமன பத்திரம் இணைய தலைவர் திரு. ஆ. சஜீவானந்தனால் வழங்கப்பட்டது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியிலிருந்து ஒருவர் இணைந்து கொண்டமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது…
இச்சந்தர்ப்பத்தில், திரு. பாலையா பாலசுந்தரம் அவர்கள், தமக்கு மக்கள் சேவை செய்வதற்கான தளமும், களமுமே தேவை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்…
செயற்குழு கூட்டத்தில் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அந்த வகையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணையத்தின் பங்கு எந்த வகையில் அமையப் போகிறது என ஆராயப்பட்டது.
மேலும், வெகுவிரைவில் இணையத்துக்கென காரியாலயம் ஒன்றை திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது..
அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின 18 அம்ச கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தாம் அவற்றை வென்றெடுப்பதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழு தெரிவித்தது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து,
இணையத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்து அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் உரையாற்றி சிறப்பித்த புத்தி ஜீவிகளான எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், எழுத்தாளரும், சட்டத்தரணியுமான இரா.சடகோபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த தமிழ் காவிரி சஞ்சிகையின் தமிழகன், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி மலர்மன்னன் ஆகியோருக்கு இணையம் நன்றி பாராட்டி மகிழ்கின்றது.