இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து சீனாவுடனான பொருளாதார உறவும் அரசியல் உறவும் முற்றாக பாதிப்பட்டுள்ளதாக எதிர்ப்புக்கள் பல விமர்சங்களை முன்வைத்திருந்தன.
இது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்காத நிலையிலேயே எதிர்தரப்புக்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சீனாவிற்கான விஜயம் மேற்கொண்டிருந்த போது பொருளாதாரம் மற்றும் அரசியல் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதனால் இருநாட்டு பொருளாதார உறவுகள் வலுவடைந்தன.
இந்நிலையில். தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.