தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கிய கூட்டம் ஒன்று பத்தாம் திகதி சனிக்கிழமை அட்டனில் இடம் பெற உள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது .
இந்தத் தீர்மானம் தொடர்பாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர் பீட முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அணி இணைப்பாளர்கள், பணிமனை உத்தியோகஸ்தர்கள், மாவட்டத் தலைவர்கள் ,தலைவிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள், நகர கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்டன் அஜந்தா விருந்தக மண்டபத்தில் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம் பெற உள்ள இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவர் எம். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர் என்று சோ. ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.