திருத்தம் செய்யப்பட்ட 19வது சட்டத்தின் மூலம் ஜனாதிபதியிடம் இருந்து பறித்துக் கொண்ட அதிகாரங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அவரிடமே வழங்க வேண்டும். இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் நிதித்துறை அமைச்சுகளை தன்வசம் பொறுப்பேற்று ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வழியுறுத்துவதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அட்டனில் 02.03.2018 அன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள சட்டம், ஒழுங்குகள் மற்றும் நீதித்துறை அமைச்சு இன்னும் எதிர்வரும் நாட்களில் முன்னால் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்பது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மூவின மக்கள் ஒண்றிணைந்து வாழும் ஜனநாயக நாட்டில் முன்னால் இராணுவ தளபதி ஒருவருக்கு சட்ட, ஒழுங்குகள் நீதித்துறை சார்ந்த அமைச்சு வழங்குவதை நாம் கண்டிக்கின்றோம். இவ்வாறு வழங்குவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக கருதுகின்றோம்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இன ரீதியான ஒரு போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இன ரீதியான போராட்டத்திற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர் முன்னால் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவர்கள். இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற கோட்பாட்டில் உள்ளடக்கி ஆட்சி நடத்தப்பட்டு வருகின்ற வேளையில் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு, நீதித்துறை சார்ந்த அமைச்சு வழங்கப்படும் போது இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற நிலைமை உருவாகும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் நாம் சிந்திக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை மாற்ற வேண்டும். அதன் தலைவரை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் நேரடியாக அந்த கட்சியை தேர்தலின் ஊடாக புறக்கணித்துள்ளனர். இது தெளிவாக தெரிகின்றது.
இந்த நிலையில் அதிகாரங்களை தன்வசம் வைத்திருப்பதாக தெரிவித்தும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மக்களின் வெறுப்புக்கு மத்தியில் இவர் எவ்வாறு செயல்படுவார். ஆகையினால் இந்த நாட்டில் உள்ள மக்கள் அதிக நம்பிக்கையுடன் நாட்டின் தலைவர் ஜனாதிபதியை விசுவாசித்து ஊழல் அற்ற நாடு ஒன்றை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பாரிய பங்குகள் இருப்பதை நாம் மறக்கவில்லை. ஆனால் ஊழல் அற்ற நாடு ஒன்றை உருவாக்கும் எண்ணத்திலேயே தற்போதைய ஜனாதிபதி செயல்படுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இவரை ஆதரித்தனர்.
இந்த நம்பிக்கை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் 19வது திருத்த சட்டத்தில் ஜனாதிபதியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு வழங்கப்படும் போது சட்டம், ஒழுங்குகள் மற்றும் நீதி, நிதித்துறை அமைச்சுகளை தன்வசம் வைத்துக்கொண்டு ஊழல் அற்ற அரசாங்கம் ஒன்றை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)