ஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வாழ்க்கைப் பெறுமானங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன், ரமழான் நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இலங்கையிலும், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பத்தில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இயற்கையின் அருளான இளம் பிறையைக் கண்டு ஆரம்பிக்கும் ரமழான் நோன்பு புதிய பிறையின் தோற்றத்துடன் நிறைவுபெறுகிறது. நோன்பு காலப்பகுதியில் இஸ்லாமிய பக்தர்கள் சொகுசு வாழ்விலிருந்து விடுபட்டு ஆன்மீக வாழ்வை நோக்கி வருவதன் மூலம் ஒரு முன்னுதாரணமான சமய அனுஷ்டானத்தில் ஈடுபடுகின்றனர். பகல் முழுதும் நோன்பிருப்பதன் மூலம் ஏழைகளின் பசியின் வலியை தாமும் உணர்ந்துகொள்ளும் உயர்ந்த மானிடப் பண்பை வெளிப்படுத்துகின்றனர்.
உண்மையில் இது சமத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சர்வதேசப் பிரகடனமாகும்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் பேராசைகளை தள்ளிவைத்து, மானிடத்திற்கு வளத்தையும் தெளிவான பன்மைத்துவத்தையும் சேர்க்கும் வகையில் பரஸ்பர மரியாதை, சமாதானம், நல்லிணக்கம், தாராளத்தன்மை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்பவற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகின்றனர்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நெருங்கிய உறவை குறிக்கும் வகையில் உடலினாலும் உள்ளத்தினாலும் அமைந்த ஆன்மீக தூய்மையை அடையாளப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு அவர்களது பிரார்த்தனைகள் வெற்றியளிக்க எனது நல்வாழ்த்துக்கள்.
மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி