சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் (Social Media) ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பு (CAFFE) தெரிவித்துள்ளது.
இதேவேளை 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டக்கூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றமை தெரியவந்துள்ளது.இந்த நிலையில் இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம் என கஃபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் வட்ஸ் அப் குழுமங்களிலும், முகநூல் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான காணொளிப் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதாகவும், இவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகத் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற பதிவுகள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.