டிக்கோயா தரவளை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தரவளை கீழ்ப்பிரிவு தோட்ட மக்களின் நலன் கருதி குடிநீர் தாங்கி ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா அமைப்பாளர்களான சுப்பிரமணியம் , நந்தகோபால் , தோட்டத்தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது
‘மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் தரவளை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கலாசார மண்டபம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதே போல இந்தத் தோட்டத்தில் உள்ளக பாதை ஒன்றைச் செப்பனிடுவதற்கு 10 இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல இந்தத் தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டமொன்றை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 25 இலட்சம் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்படுவதால் சிறிய அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரம் நிதியொதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது ‘ என்றார்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்