டின் மீன் இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் டின் மீன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தன.
இந்த தீர்மானம் நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் சுமார் 8,00 தொன் டின் மீன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் டின்மீன்களின் விலை குறைப்பு மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள VAT மற்றும் செஸ் வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன்களுக்கு நிகரான விலையில் தமது பொருட்களை வழங்க முடியாதுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு மேலதிக வரி விதிப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் டின் மீன் மொத்த வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், இதன் காரணமாக டின் மீன்களின் விலை 800 ரூபா வரை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.