உடப்புஸ்சலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் கீழ் பிரிவு தோட்ட மக்கள், இன்று (29) காலை உடப்புசலாவை – இராகலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதனால், அங்கு சுமார் மூன்று மணிநேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலையும் உருவானது.
டெல்மார் கீழ் பிரிவு தோட்டத்தில், நேற்று (28) இரவு 09 மணியளவில், 29 வயதுடைய டெல்மார் தோட்ட இளைஞன் பிரதான வீதியை கடக்கும் போது, உடப்புசலாவை பகுதியில் இருந்து இராகலை பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்காக வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், காயமடைந்தவர்களை தோட்ட மக்கள் அருகில் உள்ள டெல்மார் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அலட்சிய போக்கை கடைப்பிடித்ததால், உடப்புசலாவை, மடுல்ல பிரதேசத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து விபத்துக்குள்ளானவரை சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சுமார் ஒருமணி நேரத்தின் பின்னர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள டெல்மார் தோட்ட மக்கள், வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பிரதான வீதியின் போக்குவரத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர், உடப்புஸ்ஸலாவை பொலிஸார் மற்றும் நுவரெலியா தடவியல் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததுடன், வாகன போக்குவரத்தை சீர்செய்தனர்.
டி.சந்ரு