தந்தையர் தொடர்பான விழுமியங்களை கட்டியெழுப்புவோம்!: மைக்கல் ஜோக்கிம்

0
146

ஒரு குடும்பத்தின் இரண்டு தூண்களாக இருப்பவர்கள் அன்னையும் தந்தையுமாவார்கள்.  இருவருக்கும் வெவ்வேறு பொறுப்புக்களும், கடமைகளும், இருந்தாலும் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே குடும்பத்தின் முக்கிய சொத்தாக கருதப்படுகின்ற பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்க்க முடியும்.

குடும்பத்தை பாதுகாக்க முடியும், முன்னேற்ற முடியும். ஆனால் சமூகம் குடும்பத்தில் முக்கிய ஸ்தானத்தில் அன்னை இருப்பதாக கருதி அன்னையருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையை போலவே தந்தையும் அன்னைக்கு இணையாக குடும்பத்திற்காக தியாகங்களை செய்கிறார்.

அமெரிக்காவில் சிவில் யுத்தகாலத்தில் ஒரு குடும்பத்தில் அன்னை இறந்த போது தாயில்லாத குறை தெரியாமல் தனது ஐந்து பிள்ளைகளையும் ஆளாக்கி வளர்த்துவிட்ட தந்தையை கௌரவிக்கும் முகமாகவே தந்தையர் தினம் கொண்டாடுவது ஆரம்பிக்கப்பட்டது.

பொதுவாக எல்லா பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தபின்னர் தாய் தந்தையரை மதிப்பதில்லை என்றும் விசேடமாக தந்தையரின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் குறைகூறப்படுகிறது.

குடும்பத்தில் தந்தையரை பிள்ளைகள் மதிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பெற்றாரை மதிக்கும் சரியான விழுமியங்கள் கொடுக்கப்படாமையும், சில தந்தைமாரின் குடிபோதை மற்றும் குடும்பத்தில் அவர்களது தவறான நடத்தைகளுமாகும்.

ஓவ்வொரு வருடமும் ஜூன் 19ன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அதாவது இம்மாதம் 19ம் திகதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினத்தை பெருந்தோட்ட பகுதிகளில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பிரிடோ நிறுவனம் தந்தையர் தினத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.”தந்தையரை கௌரவிக்கும் பிள்ளைகளும்-பொறுப்புள்ள தந்தையருமே தமது குடும்பங்களையும் சமூகத்தையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்”. என்பது இவ்வருட தந்தையர் தின தொனிப்பொருளாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

தந்தையர் தினம் தொடர்பாக நடத்தப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகள் மூலம் தந்தையர்களுக்கு பிள்ளைகள் தகுந்த மரியாதையையும் கௌரவத்தையும் வழங்க வேண்டும். அவர்களின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும். அதே வேளையில், தந்தையர்கள் குடும்பத்தில் தங்கள் கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முன்மாதிரிகையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருததும் முன்வைக்கப்படும்.

இதே வேளையில் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ள குடும்பங்களில் பல தந்தைமார் பொறுப்பற்று நடந்து கொள்வதால் குடும்பங்கள் சீரழிவதையும், அதே வேளையில் அவ்வாறான குடும்பங்களிலுள்ள தந்தைமார் பொறுப்புடன் நடந்து கொள்ளும் போது அந்த குடும்பங்கள் சிறப்பாக முன்னேறுவதையும் ஒப்பிட்டுக்காட்டி தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ள குடும்பங்களிலுள்ள தந்தைமார் தாய் தந்தை ஆகிய இருவரினதும் பொறுப்புக்களை சரியான முறையில் ஏற்று செயல்பட்டால் மாத்திரமே அந்த குடும்பம் அபிவிருத்தி அடைய முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படும்.

பாடசாலைகள், சமய நிர்வனங்கள் ஆகியவையும் தந்தையர் தினத்தை கொண்டாடி பிள்ளைகள் மத்தியிலும், தந்தையர் மத்தியிலும் இது தொடர்பான விழுமியங்களை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என பிரிடோ நிறுவனம் கோருகிறது.

ஜூன் 19ம், திகதி கொண்டாடப்படவுள்ள தந்தையர் தினம் தொடர்பாக பிரிடோ பணிசெய்கின்ற பணிதளங்களில் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரிடோ நிறுவன தலைவர் திரு. மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.

அக்கரபத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here