நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்குவது தொடர்பிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகள் தமது தரப்புக்கு சாதகமாக அமையாதபட்சத்தில், தனிவழி செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே சேவல் படை இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
அவ்வாறு தனித்து செல்வதாக இருந்தால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் இதொகா வேட்பாளர்களை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்டங்கள்மூலம் கிடைக்கும் வாக்குகளால் தேசிய பட்டியலுக்குரிய வாய்ப்பும் கிட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்திலேயே களமிறங்கி இருந்தது. நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்ட மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 35 ஆயிரத்து 734 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். (இலங்கையில் தொகுதிவாரி அடிப்படையில் நடைபெற்ற கடைசி பொதுத்தேர்தல் இது)
அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டுள்ளது.
2024 பொதுத்தேர்தலில் இதொகா தனிவழி செல்லும் பட்சத்தில் 47 வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் சேவல் சின்னம் வருகின்றது.
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.
அதேவேளை, ‘மாற்றத்திற்கான தலைவர்கள் கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று மலையகத்தில் உதயமாகியுள்ளது.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேச்சையாக இக்கட்சி போட்டியிடவுள்ளது.