தனியார்துறை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் இளைஞர்கள் முனைப்பு காட்டவேண்டும்! :ஸ்ரீதரன்

0
151

இன்றைய இளைஞர் யுவதிகள் அரசாங்கத்தின் தொழிற் துறையை மாத்திரம் நம்பியிருக்காது தனியார் துறை தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் முனைப்புக்காட்ட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தனியார் தொழிற்பேட்டை ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக, இன்று (14.06.216) அட்டன் – டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். அதில் பெரும்பாலானோர் தங்களுக்கு அரச தொழில் வாய்ப்பு மாத்திரமே வேண்டும் என எத்தனிக்க முயல்கின்றனர்.

எனினும், அரச தொழில் வாய்ப்புக்களானது இன்றைய காலகட்டத்தில் தொழிலின்றிய சகலருக்கும் வழங்க கூடிய நிலையில் இல்லை. அதனை விட எல்லா அரச நியமனங்களும் தற்போது போட்டிப் பரீட்சைகளை அடிப்படையாக கொண்டே தெரிவுகள் இடம்பெறுகின்றன.

எனவே போட்டிப்பரீட்சையில் சித்தியடைய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான நியமனங்களும் கிடைக்காமல் போய்விடுகின்றன. எனவே தொடர்ந்தும் அவர் வேலையற்ற இளைஞராகவோ அல்லது யுவதியாகவோ மாத்திரம் இருந்து விடுகின்றார்.

இதனை விட தற்போது தொழிலொன்றை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையும் கிட்டதட்ட 18 தொடக்கம் 30 வரையான வயதெல்லையுடையவர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.

சில இடங்களில் 25 வயதுக்கு குறைந்தோர் மாத்திரமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதற்கான அடிப்படைக் காரணம் ஒருவர் குறைந்தது 20 வருடங்களாவது தனது சேவையை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும என்பதேயாகும்.

எனவே தொழில் தேடி காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களின் வயதெல்லை அதிகரிக்கும் போது குறிப்பிட்ட தொழில் வாய்ப்புக்களை பெற முடியா நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் பின்பே தொழிலற்ற விரக்தியால் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து தங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

எனவே, தொழிலொன்றை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு விருப்பமான தனியார் துறைகளிலும் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளும் போது தங்களுத வாழ்க்கையினை சீரமைத்துக்கொள்ள முடிகின்றது.

அதனை விட தனியார் துறைகளிலேயே அதிக சம்பளம், ஏனைய விஷேட சலுகைகள், பதவிஉயர்வுகள், நேர்த்தியான தொழில், வாகன வசதிகள் போன்ற பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

சமூகத்திலும் குடும்பத்திலும் உயரிய நிலையை அடைந்து கொள்கின்றனர். அரச தொழிலொன்றுக்கு அப்பால் இவர்கள் உயர்ந்தே காணப்படுகின்றனர். தொழிற்பயிற்சி, தொழிற் தேர்ச்சி என்பவற்றினை இலகுவில் பெற்றுக்கொள்கின்றனர்.

எனவே தொழிலொன்றுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் தனியார் துறைகளில் தங்களுக்கேற்ற தொழில்வாய்ப்புக்கள் வருகின்ற போது அதனை பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அவர்களுடைய எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

அரச தொழில்வாய்ப்புக்கள் என்பது தற்போது போட்டிப்பரீட்சை பல்வேறு நேர்முகத் தேர்வுகள், வயதெல்லை போன்ற பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியிருப்பதால் தமக்கான சிறந்த வழியினை தேர்தெடுத்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here