எமது மலையகவாழ் இளைஞர் யுவதிகள் அரச தொழிற்துறையை மாத்திரம் நம்பியிருக்காது தனியார் தொழிற்துறையில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கும் செல்லும் போது அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள முடிகின்றது என மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் காரியாலயத்தில் இடம்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றுக்கான (கார்கில்ஸ் புட்சிட்டிக்கான )நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற ஆராய்ச்சி உதவியாளருமான பெ. ஜெட்ரூட், கார்கில்ஸ் புட்சிட்டி நிறுவனத்தின் மனிதவள அபிவிருத்தி முகாமையாளர்களான நிர்மலன், அனுர பிரதீப் ஆகியோரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர் மஞ்சுளா மற்றும் அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் உட்பட நேர்முகத் தேர்வுக்கான இளைஞர் யுவதிகளும் பங்குபற்றியிருந்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய மத்திய மாகாணசபை உறுப்பினர் குறிப்பிடுகையில்,
இன்று இளைஞர் யுவதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தொழில் தேடி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை அனைவருக்கும் அரச தொழில் வாய்ப்பென்பது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவும் முடியாது எனவே தனியார் தொழிற்துறைகளில் இன்று நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கின்ற போது தங்களின் குடும்பத்தில் நிலவுகின்ற கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்ற அதேவேளை தங்களின் எதிர்காலத்தையும் வளப்படுத்திக் கொள்ள முடிகின்றது.
கார்கில்ஸ் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் பிரசித்தி பெற்ற நாமம் கொண்ட நிறுவனங்களாகும்.
இந்நிறுவனங்களில் தொழிலொன்றை பெற்றுக் கொள்கின்ற போது அது நிரந்தரமானதாகவும் அதேவேளை பதவி உயர்களை தங்களின் தொழில்வான்மைகேற்ப பெற்றுக்கொள்ளக்கூடியதுமான நிறுவனங்களாகும்.
நாங்கள் அன்றாடம் காண்கின்ற கார்கில்ஸ் புட்சிட்டியில் சாதாரண விற்பனை உதவியாளர்களாக செல்கின்ற இளைஞர் யுவதிகள் இன்று இந்நிறுவனக் கிளைகளில் முகாமையாளர்கணாக செயற்படுவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்.
எனவே தொழிலற்ற இளைஞர்கள் இந்நிறுவனத்தினூடு தொழிலை பெற்றுக் கொள்வதன் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக்கொள்ள முடிகின்றது.
எமது தோட்டங்களை கிராமங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் சிறந்த வேதனங்களை பெற்றுக் கொண்டு கிராமங்களுக்கு ஒன்றாக வரும் பொழுது அந்த கிராமமும் அதனை அண்டியுள்ள நகரமும் வளம் பெறுகின்றது.
கிராமத்தின் நகரத்தின் பொருளாதாரம் உயர்வடைகின்றது. எம்மை காத்த வழிநடத்திய பெற்றோர்கள் மனம் குளிர்கின்றது.
இளைஞர் யுவதிகள் தங்கள் தேவைகளையும் எதிர்காலத்துக்கான சேமிப்பினையும் செய்துகொள்ள முடிகின்றது.
எனவேதான் இளைஞர் யுவதிகள் அரசதொழிலை மாத்திரம் எதிர்ப்பார்க்காது தனியார் துறை தொழில்களையும் பெற்றுக்கொள்வதற்கு எமது தொழிலாளர் தேசிய சங்கமானது இப்போது தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
தொழில் வாய்ப்பின்றிய இளைஞர் யுவதிகள் எமது தொழிலாளர் தேசிய சங்கத்தினை நாடும் போது அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளமுடியும்.
நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமசந்திரன்