“மத்திய மாகாணத்தில் தனியார் பஸ் வண்டிகளுக்கு இதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மின்சாரத்துறை அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மத்திய மாகாணத்தில் தற்போது அளவுக்கு அதிகமாக பஸ்கள் காணப்படுவதுடன், அதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பஸ்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகவும் சிலவேளைகளில் பஸ் ஊழியர்கள் மத்தியில் சண்டைகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“இதன்பின்னர், ஏதேனும் ஒரு புதிய பாதைக்கு பஸ் ஒன்று சேவையில் ஈடுபடுத்த தேவைப்படும் பட்சத்தில், அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பஸ்கள், தற்போது பயணிக்கும் வீதிகளை மாற்றி சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், இன்று புதன்கிழமை முதல் மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகும் புதிய போக்குவரத்து முறை மாகாணம் முழுதிலும் விஸ்தரிக்கப்பட்ட பின்னர் இப்பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.