தபால் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பதினாறு நாட்களாக தபால் பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது ;தபால் தொழிற்சங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்து மூல பதிலளிக்கத் தவறினால் போராட்டம் தொடரும்.
தபால் திணைக்களத்தை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தபால் திணைக்களம் நாள் ஒன்றுக்கு ஏழு இலட்சம் சாதாரண மற்றும் பதிவுத் தபால்களை விநியோகிப்பதுடன், உள்நாட்டு வெளிநாட்டு பார்சல்கள் பெருந்தொகையையும் இவ்வாறு விநியோகம் செய்து வருகின்றது.இந்த நிலையில், சிரேஸ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு, மோட்டார் போக்குவரத்து அபராதம், சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.