இலங்கை வரலாற்றில் எந்த ஒரு தொழிற்சங்கமும் 78 ஆண்டுகளை எட்டிப்பிடித்ததாக வரலாற்றுப் பதிவுகள் எதுவுமே கிடையாது. எனினும் இ.தொ.கா சலைக்காமல், மலைக்காமல் தனித்து நின்று 78 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் தனது இலட்சியக் கனவை அடைய பயணித்துக் கொண்டிருப்பதாக இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் சௌமிய பவனில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் (25) சௌமிய பவனில் இ.தொ.கா வின் 78வது ஆண்டு நிறைவு விழா இ.தொ.கா பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைவர் முத்து சிவலிங்கம் தொடர்ந்து அங்கு பேசுகையில் தெரிவித்துள்ளதாவது:-
1939ம் ஆண்டு ஜவகர்லால் நேரு தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாற்றம் அடைந்தது. தமிழகத்தில் ஈ.வே.ரா.பெரியார் என்றால் மலையகத்தில் பெரியார் சௌமியமூர்த்தி தொண்டமான் தான் என்பது அன்று மட்டுமல்ல. இன்றும் கூட ஏட்டிலும், நாட்டிலும், வீட்டிலும் பேசப்படுகின்ற நம் பெரியார் அவரே. தொழிற்சங்கத்தின் மூலாதாரமாக விளங்கிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இந்த ஆலவிருட்சம் போல் மக்கள் மத்தியில் பிரகாசிக்கின்ற ஒரு ஆலமரம். ஆனால் அது எவருக்கும் வளைந்து கொடுக்கும் வாழைமரம் அல்ல. இ.தொ.கா கடந்து வந்த பாதைகள் மிகவும் கரடு முரடானது. பல்வேறு போராட்ங்களை வென்றெடுத்த பிதாமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களோடு இணைந்து செயற்பட்ட முன்னோடித் தலைவர்களையும், நாம் இத்தருணத்தில் கௌரவமாக நினைவு கூருகின்றோம்.
ஒரு அமைப்பு தனித்து நின்று முக்கால் நூற்றாண்டு கால எல்லையைத் தாண்டுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அதே மக்கள் பலம், அதே மக்கள் ஆதரவு என்றும் இ.தொ.கா விற்கு உண்டு. ஏனென்றால் அன்றைய நமது முன்னோடிகள் மிக அர்ப்பணிப்போடு செயற்பட்டதன் விளைவாகவே இன்று எம்மத்தியில் உள்ளவர்கள் அதனை அறுவடையாக அறுத்து பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே அதனது தாரக மந்திரமாகும்.
இ.தொ.காவிற்காக வாழ்நாளில் மேலும் சக்தியாகவும், உறுதுணையாகவும் அமைந்தவர்கள், நம் மத்தியில் தற்போது இல்லாவிட்டாலும் அவர்களை நாம்; நன்றியோடு நினைவுகூர மறக்கவில்லை.
இதேவேளை எமது பயணத்தில் தங்குதடையின்றி ஊடகங்கள் நடுநிலமையாக செயற்பட்டதையும், நினைவூட்ட வேண்டும். அதிலும் கேசரி, எம்மை விட நான்கு ஆண்டுகள் கடந்து விட்டாலும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நேசக்கரம் நீண்டியதில் முக்கிய பங்களிப்பை மறந்து விட முடியாது.
இந்த 78 வது ஆண்டு நிறைவில் எம்மோடு இணைந்து பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கிய தோட்டத் தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும், சமூகநல ஆர்வலர்களுக்கும், சிரேஷ்ட உத்தியோகஸ்தர்களும் எமது சகல அங்கத்தவர்களுக்கும் நன்றி கூற நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்றார் தலைவர் முத்து சிவலிங்கம்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா