கடத்தல், காணாமல் போதல் தெற்கில் நடக்கும் போது, சிங்களவர் ஒருவர் கடத்தப்படும் போது அதை அரச பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அதுவே வடக்கில் நடக்கும் போது, தமிழர் ஒருவர் கடத்தப்படும் போது அதை அரச நிர்வாகம் என்று கூறுகிறீர்கள். என்ன கதை இது?
இப்போது பாருங்கள். சிலநாள் முன் கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்படும் ஆபத்தை சந்தித்ததாக கூறப்படும் ரயான் ஜயலத் என்ற மருத்துவ கல்லூரி மாணவர், ஒரு தமிழராக இருந்திருந்தால், அந்த சம்பவம் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டீர்கள். ஊடகங்களும் கைவிட்டு இருப்பீர்கள். அவரை ஒர் புலி என எல்லோரும் கூறி கதையை முடித்திருப்பீர்கள். இதை நான் மிகப்பொறுப்புடனும், கவலையுடனும் கூறுகிறேன். இப்படி செய்யாதீர்கள். சிங்களவரோ, தமிழரோ அனைவரையும் இந்நாட்டு பிரஜைகள் என்று பாருங்கள். இந்த காணாமல் போக செய்தல் என்ற மகாபாவத்தை இந்நாட்டில் இருந்து துடைத்து எறிய முன் வாருங்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று இரவு நள்ளிரவுவரை நடைபெற்ற அரசியல் விவாதத்தில், பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ராவய பத்திரிக்கை ஆசிரியர் ஜனரஞ்சன ஆகியோருடன் கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இங்கு ஒரு சட்டம், அங்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. காணாமல் ஆக்கல் என்ற குற்றத்தை நாம் எலோரும் ஒழிக்க வேண்டும். அதன் ஒரு அங்கமாகவே இந்த காணமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவலம் வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் 1971, 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது. 1971ல் 10,000 பேர் காணாமல் போனதாக சொல்லப்பட்டது. 1989ல் மனோரி முத்தெடுகம ஆணைகுழுவின்படி 26,401 பேர் காணாமல் போனதாக சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அன்று ஒரு மனித உரிமை போராளியாக இருந்து 60,000 பேர் காணாமல் போனதாக சொன்னார். இவர்கள் தெற்கில் காணாமல் போன பெரும்பாலும் சிங்களவர்கள்.
சமகாலத்தில், வட-கிழக்கிலும், கொழும்பிலும் தமிழர் காணாமல் போனார்கள். தருஷ்மன் அறிக்கையின்படி 40,000 பேர் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்க அறிக்கையின்படி 16,000 பேர் என எண்ணுகிறேன். பரணமகம ஆணைக்குழு 20,000 பேர் என்று கூறுகிறது. மன்னார் ஆயர் அவர்கள் 147,000 யுத்தத்தில் காணாமல் போனதாக சொல்லியுள்ளார். இக்கட்டத்தில் குறுக்கிட்ட நிகழ்ச்சி நடத்துனர், “மன்னார் ஆயர் கூறிய எண்ணிக்கையை விடுவோம். அவருக்கு அதை சொல்ல தகைமை இல்லை” என கூறியபோது, “அதை கூற அவருக்கு உரிமை உள்ளது. ஏனைய எல்லோரும் கூறும்போது தான் அறிந்ததை அறிவிக்க ஆயருக்கும் முடியும்” என அமைச்சர் மனோ கணேசன் பதில் கூறினார்.
எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற விபரங்களை நாம் இந்த காணாமல் போனோர் அலுவலகம் மூலம் திரட்ட முடியும். இது மிகவும் முன்னேற்றகரமான ஒரு படி. எனவே அதை உருவாக்குவோம். இன்று கொழும்பில் இராணுவத்தினர், பெற்றோல் விநியோக சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவம் என்பது, ஒரு தங்க கத்தி என பெருமை பேசலாம். ஆனால், கத்தி தங்கமாக இருந்தாலும், குத்தினால் இரத்தம் வரும். எனவே இன்று சேவைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் நாளை ஆட்களை கடத்தலாம். இது நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கலாம். எனவே காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது, தமிழருக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பிரயோஜனமானது.