நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது
நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும் என இன்று பகல், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறினார்.
தனது உரையில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அரசாங்க திட்டங்களுக்கு, சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது.
இன்று காலை பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஒரு திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்து இருந்தது. அந்த திட்டத்தின் பெயர் “சியவெர” என்பதாகும். இதற்கு நான் “சுயசக்தி” என்ற தமிழ் பெயரை இங்கே சூட்டுகிறேன். இதோ இப்போது சபையில் இருக்கும் அமைச்சர் பொன்சேகாவுக்கு காலையிலேயே இதை நான் அறிவித்து விட்டேன். இனிமேல் இது தொடர்பில் என் அமைச்சின் மொழியுரிமை பிரிவு கவனம் செலுத்தும்.
அடுத்து, 882 அரசாங்க படிவங்களை அடையாளம் கண்டு அவற்றை தமிழிலும் மொழிபெயர்த்து மும்மொழி படிவங்களாக மற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொழிபெயர்ப்பாளர் குழாம் ஒன்றை என் அமைச்சில் அமைத்துள்ளேன். இது இன்னமும் விஸ்தரிக்கப்படும். தம் தாய்மொழியில் இந்நாட்டு குடி மக்கள் அரச அலுவலகங்களில் எழுத்து மூலமான, வாய்மொழி மூலமான பதில்களை பெறும் உரிமையை இன்றுள்ள அரசியலமைப்பில் பெற்றுள்ளனர். இந்த உரிமையை நடைமுறைபடுத்த, தமிழ், சிங்கள மொழிகளை படித்தவர்களை உள்வாங்கி மொழியறிவு, மொழி பெயர்க்கும் திறன், கணணி அறிவு ஆகியவற்றில் பயிற்சி அளித்து, மொழி அதிகாரிகள் என்ற பெயரில் அரச அலுவலங்களில் நியமிக்க முடிவு செய்துள்ளேன். இந்நோக்கில் சுமார் 3,000 மொழி அதிகாரிகள் தேவைப்படுவதாக எனது அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அதை பெறுவது தொடர்பில் நான் இப்போது, நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன். என் திட்டங்களை படிப்படியாக அமுல் செய்ய எனக்கு கால அவகாசம் தாருங்கள். என்னை நம்புங்கள். நான் இவற்றை செய்து முடிப்பேன்.