தமிழ் இளைஞனை நாய்களை விட்டு துன்புறுத்திய சம்பவம்; முறையாக விசாரணை வேண்டும்!

0
36

தமிழ் இளைஞர் ஒருவர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். தமிழ் இளைஞன் சிங்கள உத்தியோகஸ்த்தரை இவ்வாறு தாக்கியிருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட்டவல பெருந்தோட்டத்துக்குரிய உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட உத்தியோகஸ்த்தர் மனிதாபிமானமற்ற வகையில் அத்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதனை இனவாத வைரஸ் என்றே குறிப்பிட வேண்டும்.

அரசாங்கத்தை நான் குறை சொல்லவில்லை. தோட்ட நிர்வாகங்களில் முறையற்ற வன்மமான செயலை குறிப்பிடுகிறேன்.

தமிழ் இளைஞனை நிலத்தில் வீழ்த்தி, நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுகிறார்கள். ஒரு தரப்பினர் சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்று தெரியாது, யார் தவறிழைத்தார்கள் என்பதும் தெரியாது. இதனை பொலிஸார் பார்க்க வேண்டும்.

தெற்கில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு தான் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெற்கு பகுதியில் பெண்களை அவமானத்துக்கு உட்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

ஹோமாதொல தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு குற்றவாளிகளை முன்னிலைப்படுத்துங்கள்.

நிலத்தில் தள்ளப்பட்டது தமிழ் இளைஞன், அவரை தள்ளிட்ட கிங்ஸ்லி என்பர் சிங்களவர் இருவரும் இலங்கையர்கள். இந்த சம்பவம் மாறி நடந்திருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here