இந்த நாட்டில் பச்சை, நீலம் சிகப்பு, சிகப்பு நீலம் என கட்சிகள் ஆட்சி ஆண்ட வேளையில் 30 வருட காலம் அவ்வாறான ஆட்சிக்கு தம்மை இணைத்துக் கொண்ட மலையக அரசியல்வாதிகள் 30 வருடத்தில் செய்து முடிக்காத விடயங்களை 3 வருடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துயிருக்கின்றோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.தலவாக்கலையில் நடைபெற்ற த.மு.கூட்டணியின் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்ச் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தையும் பெறுவதற்கு அமைச்சரவையில் ஏகமனதாக தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தியது த.மு.கூட்டணி என்பதை மக்கள் உணர வேண்டும்.
நாம் இந்தியாவில் எமக்கு மாடி வீடுகளை அமைத்துக்கொள்ளவில்லை. மாறாக மலையக மண்ணில் நமது மக்கள் மாணத்தோடும், மரியாதையோடும், உரிமையோடும் வாழ்வதற்கான தனி வீடுகளை அமைத்து உள்ளோம் என்றார். அதேவேளையில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேசத்தில் காணப்பட்ட பிரதேச சபைகளை இன்று விரிவுப்படுத்தி 6 சபைகளை உருவாக்கிய பெறுமையும் த.மு.கூட்டணியை சாரும்.
மலையகத்திற்கென புதிதாக அதிகார சபை ஒன்றை அமைப்பதற்குரிய அமைச்சரவை தீர்மானத்தை எடுக்கவிடுக்கின்றோம். சுதந்திரமான மலை நாடு ஒன்றை நாம் உருவாக்க இருக்கின்றோம்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையகம் சார்ந்த நுவரெலியா, பதுளை, இரத்தனபுவரி, கேகாலை, கொழும்பு ஆகிய பகுதிகளில் எமது உறுப்பினர்களாக 110 உறுப்பினர்களை வென்று த.மு.கூட்டணி சாதனைப்படைத்துள்ளது.
இவை அனைத்தும் மக்களின் சக்தியால் எமக்கு கிடைத்ததாகும். இன்று தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக காணிகளை பெறுவதற்கான அமைச்சரவை தீர்மானத்தையும் வெகுவிரைவில் பெறவிருக்கின்றோம்.
தடைப்பட்டிருந்த இந்திய அரசாங்கத்தின் வீடு அமைப்பையும், மலையக மக்களுக்காக பெற்ற பெறுமையும் தமிழ் முற்போக்கு கூட்டணியே சாரும் என தெரிவித்த இவர் இவ்வாறாக மலையக மக்களுக்கு 3 வருட காலப்பகுதியில் படிப்படியாக அவர்களின் தேவை உணர்ந்து நாம் சேவை செய்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)