இதொகாவுக்கு இரண்டு அமைச்சு பதவி கிடைக்கவிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன, ஆனால் கிடைக்குமா இல்லையா என்பது பற்றி இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான அல்லது உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளிவராத நிலையில் மலையகத்தில் இந்த விடயம் சூடுபிடித்துள்ளது.
முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் இதொகாவுக்கு அமைச்சு பதவி கொடுப்பதை தாம் விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.
இதற்கு பின்னணி காரணங்களையும் அவர் சொல்லியிருக்கிறார் அதாவது நல்லாட்சி அமைவதற்காக தாம் அரும்பாடு பட்டபோது அந்த ஆட்சி வந்துவிடக்கூடாது என எதிர்த்தரப்பில் இருந்து கொண்டு மகிந்தவுடன் கூட்டு சேர்ந்து குழப்பம் விளைவித்த இதொகாவுக்கு எப்படி இந்த நல்லாட்சி அமைச்சு பதவிகளை வழங்கும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார், இது அவரது பார்வையில் சரியானதே ஆனால் கடந்த அரசில் மகிந்தவுடன் இறுதிவரை
இருந்துவிட்டுத்தான் இவரும் கட்சி மாறினார் என்பதை கொஞ்சம் அவர் சிந்தித்திருக்க வேண்டும்.
இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்களுக்கு பல சேவைகளை ஆற்றக்கூடிய ஒரு பலம்வாய்ந்த அமைச்சை திகாம்பரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு நிலையில் அந்த அமைச்சு ஊடாக உச்சக்கட்ட சேவை செய்து கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதொகாவுக்கு அமைச்சு பதவிகள் வழங்கபடுமாயின் அந்த அமைச்சுக்களின் ஊடாக மேலும் நன்மைகள் மலையகத்துக்கு கிட்டும் என்ற ஒரு பொது சிந்தனையோடு பயணித்தால் இந்த மலையகத்து அரசியல் நீரோட்டம் கரடு முரடுகளை கடந்து பயணிக்கும் என்பதே அவதானிகள் கருதுகிறார்கள்.
இதொகாவின் தலைவர் முத்து சிவலிங்கம் ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் கடந்த அரசில் திகாம்பரத்துக்கும், இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் பிரதியமைச்சர்கள் பதவி வழங்கபட்டபோது நாங்கள் அதை எதிர்க்கவில்லையே என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியாக இருக்கட்டும் அல்லது இதொகாவாக இருக்கட்டும் இரண்டு பகுதியும் மலையக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கோடுதானே கடந்த தேர்தலில் போட்டியிட்டீர்கள்? எனவே அவரவர் செய்வதை செய்து கொண்டு இருங்கள் உங்களில் அதிக சேவை செய்தவர்களுக்கு மலையக மக்கள் நன்றி கடனாக இருப்பார்கள் இதை விடுத்து நான் பெரிதா நீ பெரிதா என்ற உங்கள் அறிக்கைகள் உங்களால் மேற்கொள்ளப்படும் குடுமிப்பிடி சன்னதம் மலையக மக்களை வெறுப்படைய செய்யுமே ஒழிய விருப்பை உண்டாக்காது.
எனவே இதொகாவுக்கு அமைச்சு பதவிகள் கிடைத்தால் அவர்கள் ஊடாக கிடைக்கும் நன்மைகள் மலையகத்துக்கு வந்து சேரட்டும் என்ற பொது நோக்குடன் மலையக மக்களின் சேவைகளுக்காக போட்டி போடுங்கள் அடுத்த தேர்தலில் உங்களை உச்சாணியில் ஏற்றுவதா அல்லது அச்சாணியை பிடுங்கி விடுவதா என்பதை மலையக மக்கள் தீர்மானிப்பார்கள் அதுவரை உங்களுக்குள் குடும்பி பிடி சன்டையை கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.
சோழன்.