மிகப் பிரமாண்டமாக கத்தாரில் நடைபெற்ற பிபா உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நடப்புச் சம்பியன் பிரான்ஸ் அணியை வெற்றிகொண்டு 3 ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த உலகக்கிண்ண போட்டியின் முடிவில் தனது ஓய்வு குறித்து நட்ச்சத்திர வீரர் மெஸ்ஸி கருத்து வெளியிட்டுள்ளார்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி கத்தாரில் நடைபெறும் உலகக்கிண்ண ஆட்டங்களுடன் உதைபந்தாட்டத்தில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் மெஸ்ஸி ஓய்வு குறித்தான தனது முடிவை மாற்றியுள்ளார்.இன்னும் பல போட்டிகளில் தான் விளையாட உள்ளதாகவும், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் மெஸ்ஸி கூறியுள்ளார்.
பிபா உலகக்கிண்ண இறுதியாட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பல போட்டிகளின் வெற்றி நாயகனான மெஸ்ஸி, அடுத்த கோபா அமெரிக்கா மற்றும் பீஃபா உலகக் கிண்ணத் தொடர்களிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.