தலவாக்கலைக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை -காத்திருந்தவர்களால் அமைதியின்மை

தலவாக்கலை நகர மத்தியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்தவர்களால் இன்று (22) அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், தமக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, சிலர் உரிமையாளரை கடந்த வாரம் திட்டிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தலவாக்கலையில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்க எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும் அவை போதமானதாக இல்லை என்றும் தலவாக்கலை நகரில் உள்ள வாகனங்களுக்கு எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலும் எரிபொருளை வழங்கப்படுவதில்லை என்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருளுக்காக அட்டன் – தலவாக்கலை, தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் வாகனங்கள் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்படுவதால், நகர மத்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக போக்குவரத்து பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் இடையில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)