அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளையார் பகுதியில் முச்சக்கரவண்டியின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான ஸ்டீபன் வெரோனிக்கா வயது (38) என்பவராவார். மேலும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 29.8.2017 மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கொட்டக்கலை நகரில் குறித்த பெண் ஏறியுள்ளார். குறித்த முச்சக்கர வண்டி அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளையார் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தவேளை வீதியோரமாக இருந்த ஆலமரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை கேதீஸ்