மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில், தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமல் காணப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கடிதங்கள் தொடர்பான விவகாரம் தொடர்பில், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான சர்வதேச செயலணி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அத்தோட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், உரியவர்களிடம் விநியோகிக்கப்படாமல் இருந்துள்ளது. இது தொடர்பில் தோட்ட மக்களால், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான சர்வதேச செயலணியின் நுவரெலியா கிளைக் காரியாலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, செயலணியின் இணைச் செயலாளர் வி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த தோட்டத்துக்கு, தபால் விநியோகம் செய்ய, தபால் திணைக்களத்தால் ஒருவர் நியமிக்கப்படாத நிலையில், தோட்டத்தின் நிர்வாகத்தின் ஊடாகவே கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன.
எனினும், குறித்த காலப்பகுதியில் (2016-2018) இத்தோட்டத்தில் தலைமை வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஒருவரால் கடிதங்கள், உரியவர்களுக்கு வழங்கப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக, தோட்ட மக்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், தோட்ட தொழிற்சங்க தலைவர்கள், தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோதிலும், நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும், இது தொடர்பில் ஹட்டன் தொழில் திணைக்களத்தின் கவனத்துக்கும் கொண்டுவந்து, பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட தோட்ட மக்கள், தலவாக்கலை பொலிஸாரின் உதவியுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதங்களையும் மீட்டுள்ளனர்.
பதிவு தபால்கள், அடகு நகைகள் தொடர்பான வங்கி கடிதங்கள், கம்பனிகளின் கடிதங்கள், அரசாங்க திணைக்களங்களின் தொழில் வாய்ப்பு கடிதங்கள் என பல கடிதங்கள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கடிதங்களை மறைத்து வைத்ததன் ஊடாக, மனித உரிமையை மீறப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான சர்வதேச செயலணி தெரிவித்துள்ளது.