தலவாக்கலையில் 5 வயது சிறுமியை கடத்திச் சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகத்துக்குரியவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமோத ஜயசேகர முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமியின் தாய், சிறுமியை காலி பகுதியில் வளர்த்தெடுத்த தாய் மற்றும் அவரின் கணவர் ஆகியோருடன் தலவாக்கலை – லிந்துலை நகரசபை தவிசாளரின் உத்தியோக இணைப்பதிகாரியான வர்த்தகர் ஒருவர் என நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், சிறுமியை நுவரெலியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த வருடம் ஜுன் மாதம் 4ம் திகதி அக்கரபத்தனை – போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளுடன் தலவாக்கலை நகரிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றி கடத்திச் சென்ற இருவர், அவரை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தை வெளியில் கூறக்கூடாது என்றும் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது தான் வெளிநாடு செல்வதற்கு தாயாராகவுள்ளதாகவும், தமது பிள்ளைகளை பாதுகாப்பாக விட்டு செல்ல வேண்டும் எனவும் பிள்ளைகளின் தந்தை கொழும்பில் தொழில் செய்வதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சந்தேக நபர்களான நகர சபை தவிசாளர் அசோக சேபால மற்றும் சபையின் உறுப்பினர் ஆகியோர், வேறொரு நபரிடம் குறித்தப் பெண்ணையும் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று தாயிடமிருந்த 5 வயது சிறுமியை காலி பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டரை வயது சிறுவனை போகாவத்தை பகுதியில் பௌத்த விகாரை பராமரிப்பாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேநேரம், தாய் கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் சம்பாதித்த பணத்தில் கைப்பேசி ஒன்றை பெற்று, தமது கணவருக்கு அழைப்புகளை ஏற்படுத்தி, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனக்கு நேர்ந்தவற்றை விபரித்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் வீடு திரும்பியதையடுத்து நேற்றையமுன்தினம் நுவரெலியா காவற்துறை நிலைய சிறுவர் பாதுகாப்பு பிரிவில் விற்பனை செய்யப்பட்ட 5 வயது சிறுமி தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கமைய, குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் நேற்று கைதான தலவாக்கலை லிந்துலைநகர சபை தவிசாளர் அசோக சேபால உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று கைதான மேலும் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பிலும், குறித்து சிறுமி மற்றும் அவரின் தாய் ஆகியோர் தொடர்பிலும் ஆராய்ந்தும் எதிர்வரும் 11ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.