தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன் 21.03.2018 அன்று மதியம் தோட்ட நிர்வாக செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுப்பட்டனர்.தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரிய கட்டுக்கலை தோட்டத்தில் கடமைபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரை இத் தோட்டத்திலிருந்து வெளியேற்றும்படி கோரிக்கையை முன்வைத்தே இந்த பணிபுறக்கணிப்பும், ஆர்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தோட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் தொழில் விடயத்தில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களுக்கு கெடுபிடிகளை முன்னெடுப்பதாகவும், தொழிலாளர்களின் பொது தேவைகளுக்கு உரிய நேரத்தில் விடுமுறைகள் வழங்காது காலதாமதம் படுத்துவதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்க நேரிடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வெளிக்கள உத்தியோகத்தர் முன்னர் பணியாற்றிய பல தோட்டப்பகுதியில் இவ்வாறான நடவடிக்கையை தொடர்ந்ததால் விரட்டியடிக்கப்பட்டவர் என தெரிவிக்கும் தொழிலாளர்கள் கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களுக்கும் இவ்வாறு இறக்கமற்ற செயலில் ஈடுப்படுவதை கண்டித்தே தாம் வீதிக்கு இறங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கான உரிமையை மீறிவரும் இவரை இத்தோட்டத்திலிருந்து நீக்கி அவ்விடத்திற்கு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்பதை பலமுறை தோட்ட நிர்வாகத்திற்கு எடுத்து கூறியும் நிர்வாக அதிகாரி கவனத்திற்கு கொள்ளவில்லை என தொழிலாளர்களின் ஆர்பாட்டத்தின் போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இவர்களின் கோரிக்கை தொடர்பில் அட்டன் தொழில் திணைக்களத்தில் தொழில் அடையாளர் முன்னிலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி கண்டதால் ஆர்பாட்டத்தை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தமது கோரிக்கைக்கு சரியான தீர்வு எட்டப்பட்டு வெளிக்கள உத்தியோகத்தரை தோட்டத்தைவிட்டு வெளியேற்றும் வரை போராட்டத்தையும், பணிபுறக்கணிப்பையும் கைவிடப்போவதில்லை என்றும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)