தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் (19) இன்று காலை 6.30 மணி அளவில் குடியிருப்புக்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்து பாரிய 50 அடி உயரத்திலுள்ள மதில் ஒன்று சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய் ஒருவருக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த தாய் தலவாக்கலை தோட்டத்தில் இயங்கும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
இந்த மண்திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளன.
குறித்த மண்சரிவு கடந்த சில தினங்களாக பெய்துவரும் கணத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதே வீட்டிலிருந்த கர்ப்பிணித் தாயொருவர் எவ்வித ஆபத்துக்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
எனவே மலைகளுக்கும் மண் மேடுகளுக்கு மண்திட்டுக்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலைவாஞ்ஞன்