இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் சேவை சில சீரற்ற சேவையை வழங்கி வருவதால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
தினமும் மாலை 6.30 மற்றும் 6.55 மணிக்கு தலவாக்கலையிலிருந்து வட்டகொட , மடக்கும்புற ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரச பேருந்துகள் அண்மைக் காலமாக சீராக இன்மையால் பயணிகள் கூடுதலான பணத்தை கொடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
குறிப்பாக கட வுச்சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், தொழிலை முடித்து வீடு செல்லும் அரச தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்துகளின் சாரதிகள் அல்லது நடத்துனர்கள் விடுமுறையில் சென்றிருப்பின் அல்லது பேருந்தில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டிருப்பின் அதற்கு மாற்றுத் திட்ட
நடவடிக்கைகளை அட்டன் மேற்கொள்வதில்லையென பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ரூபா 25 செலவில் செல்ல வேண்டிய இடத்திற்கு ரூபா 50 முதல் 100 வரை செலவு செய்ய வேண்டி நேரிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குறித்த இரு பேருந்துகளும் தினமும் காலை 6.45 மற்றும் 7 மணிக்கு வட்டகொட ‘ மடக்கும்புற பகுதிகளிலிருந்து தலவாக்கலை நோக்கி பெருந்தொகை பாடசாலை மாணவர்களை ஏற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இறு தொடர்பாக அட்டன் டிப்போ பொறுப்பதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பயனளிக்கவில்லை.
இருப்பினும் கடமையிலிருந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பில் தெரிவித்த போது, குறித்த பாதையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தேடிப் பார்த்து வெகு விரைவில் சீரான போக்குவரத்து சேவை இடம் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததோடு இப்பிரச்சினையை நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி யளித்தார்.
எனவே குறித்த பேருந்துகளை சீராக சேவையில் ஈடுபடுத்த பிப்போ அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.
சுஜீவன்