கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது முஸ்லிம் இளைஞரொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முழுவதும் திகன பகுதியில் பெரும் பதற்றம் நிலவிய நிலையில் வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்போது தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முயன்ற போதே குறித்த இளைஞன் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் திகன பள்ளிக்கு அருகில் இருக்கும் சகோ. ஷம்சுதீன் என்பவரின் மகனே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர்.அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.