தெரணியகலையில் இடம்பெற்ற கோபியோ அமைப்பின் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

0
121

“இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்” “மாணவர்களே சமுதாயத்தின் தூண்கள்” என்று பெரியோர் கூறியது ஒரு கூற்று மட்டுமல்ல குறித்த கூற்றுக்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு குறிகாட்டி. குறித்த குறிகாட்டியின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவனும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு இன்றையக் காலக்கட்டத்தில் எமது நாட்டில் குறைந்த பட்சம் உயர்தரமாவது கற்றிருக்கவேண்டும். அதனடிப்படையில்தான் வாழ்க்கையில் ஒரு நிரந்தரமான ஒரு அத்திவாரத்தை இடலாம். உயர்தர கல்விக்கு பின்னர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் தனது வாழ்க்கையை குறித்தப் பாதையில் அமைத்துக்கொள்வார்கள். எனவே நாங்கள் ஒவ்வொருவரும் பல்கலைக்கழகத்தற்கு தெரிவுசெய்யப்படுவதற்கு ஏற்றவகையில் எமது கல்வி தொடர்பான குறிக்கோள்களை அமைத்துக்கொள்ளவேண்டும்.
இலங்கையில் காணப்படுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை மாணவர்களே உள்வாங்கப்படுவதால், உயர்தர பரீட்சைக்கு பின்னர் எவ்வாறு தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, எவ்வாறு குறிக்கோள்களை அடைவது போன்ற வினாக்களுக்கு பதில் வழங்குவதே இக்கருத்தரங்கின் நோக்கமாக அமைந்திருந்தது.

2

அதிலும் குறிப்பாக பலகலைக்கழக கல்விக்கு மேலதிகமாக அல்லது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படாமல் தங்களது கல்வியை தொடரமுடியாமல் காணப்படுகின்ற மாணவர்களுக்கு எவ்வாறான முறையில் தொழில் மற்றும் ஏனைய கற்கைநெறிகளை மேற்கொள்ளலாம்., குறித்த கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஒவ்வொருவரும் எவ்வாறான குறிக்கோள்களையும் முன்னேற்றத்தினையும் அடையலாம் என்பதை விபரமாக எடுத்துரைப்பதோடு வளர்ந்துவரும் இந்த பொருளாதார முறைமைகளில் எவ்வாறு எங்களுக்கென்று ஒரு தொழில்துறையை நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்? என்பதையும் தெளிவுப்படுத்துமுகமாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

இக்கருத்தரங்கினை நேற்று 23.09.2017ஆம் திகதி சனிக்கிழமை தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கோப்பியோ அமைப்பு மிகவும் ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் பங்குப்பற்றுநர்களாக எட்டியாந்தோட்டை புனித மரயாள் த.ம.வி, தெஹியோவிட்ட த.ம.வி, தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் த.ம.வி, சப்புமல்கந்த த.ம.வி, மியனவிட்ட த.வி ஆகிய பாடசாலைகளை சேர்ந்த உயர்தர மாணவர்களும் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.

இக்கருத்தரங்கு இலங்கைக்கான கோப்பியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக இந்திய உதவி தூதுவராலயத்தின் வீசா புணர்வாழ்வுக்கு பொறுப்பான செயலாளர் ரமேஸ் ஐயர் கலந்துக்கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குமார நடேசனும், வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதனும், கோப்பியோ அமைப்பின் தலைவர் கௌஷpக் உதேஷpயும், ஹட்டன் கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.சாந்தகுமாரும், சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜனும், மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் ஆர்.மதனும், ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான பெரியசாமி சுரேந்திரனும் கலந்துக்கொண்டனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக கா.சௌந்தராஜனும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செயலாளராக சமூக சேவையாளர் ராஜ} பாஸ்கரனும் செயற்பட்டனர்.

14

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டது மாத்திரமன்றி “இலட்சியம் மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் சிறந்ததொரு கருத்துப்பகிர்வை வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன் வழங்கியிருந்தார். வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய 20 விடயங்களை குறிப்பிட்டு மாணவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தார். தெளிவாக சிந்தியுங்கள், உங்களை புதிய அனுபவத்திற்கு வெளிப்படுத்துங்கள், மற்றவர்களிடம் இரக்கம் காட்டுங்கள், தைரியமாக இருங்கள், எப்பொழுதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களுக்கு மனநிறைவை தரும் தொழிலை செய்யுங்கள், கல்வியை வாழ்நாள் முழுதும் தொடருங்கள் என அவரது கருத்துத்தலைப்புக்கள் அமைந்திருந்தது.

அடுத்து “அரச சேவைகள்” எனும் தலைப்பில் ஹட்டன் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாந்தகுமார் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். இவர் முதலில் மலையக மக்கள் என்போர் யார்? என வினவி, அதற்கான ஆதாரங்களை தந்தார். இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டிற்கு வாழ வந்தவர்கள் அல்ல இந்த நாட்டை ஆளவந்தவர்கள் என வரலாற்று எடுத்துக்காட்டுக்களுடன் விளங்கப்படுத்தினார். பின் தலைப்புக்குள் வந்து உரையாற்றிய அவர் இன்று அரச சேவைகளில் என்ன என்ன தொழில்கள் உள்ளதென்றும் அதில் எம்மவர் எத்தனைபேர் உள்ளனர் என்றும், எதிர்காலத்தில் மாணவர்கள் அரச சேவைகளுக்கு உள்வாங்கப்படவேண்டும் என்றார். இறுதியாக குழந்தை அழுதால் தாய் பாலூட்ட வேண்டும். பாலுக்கு பதிலாக தாய் இனிப்பு வழங்கக் கூடாது என்றார். பாரதம் எங்கள் தாய். மலையக மக்கள் பாரத தாயின் பிள்ளைகள் அந்த பிள்ளைகள் அழும்போது இந்தியா பால் கொடுப்பதற்கு பதிலாக இப்பொழுது இனிப்புதான் கொடுக்கிறது என்றார். இதன் ஊடாக அவர் கூறிய கருத்து மலையக மக்கள் கல்வியில் உயர, உயர் கல்வியை தொடர இந்திய அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என்றார். மலையக மாணவர்களுக்கு இந்திய அரசு அதிகமாக புலமைப் பரிசில்களை வழங்கி, உயர்கல்வி கற்க வாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்று ரமேஷ; ஐயரிடம் கேட்டுக்கொண்டார்.
அடுத்து கோப்பியோ ஸ்தாபக தலைவர் பி.பி.தேவராஜ் உரையாற்றினார். அவரைத்தொடர்ந்து “கல்வி சாரா கற்கைநெறிகள்” என்ற தலைப்பில் சட்டத்தரணி கே.கே.எஸ்.கணேசராஜன் சிறந்ததொரு உரையை நிகழ்த்தினார். அவரைத்தொடர்ந்து மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஆர். மதன் தொழில் கல்வி தொடர்பாக, கணனி கற்கைகளில் பட்டதாரியாவது குறித்து உரையாற். இறுதியில் வழிகாட்டல் ஆலோசகர் பெ.சுரேந்திரன் “இலக்கை தீர்மானித்தல்” எனும் தலைப்பில் சிறந்த வழிகாட்டலை வழங்கினார்.கருத்தரங்கு இடையில் பங்குபற்றிய பாடசாலைகளுக்கு ஆங்கில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதிபர் உரையில் எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எம்.உதயகுமாரன் இவ்வாறான கருத்தரங்ககளை தொடர்ந்தும் தமது பிரதேசத்திற்கு நடாத்தி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதோடு, அரசியல் வாதிகளாலும், கல்விமாண்களாலும் புறக்கணிக்கப்பட்டுவரும் மலையகம் எனும் சொல்லாடலில் இருந்து தனித்துவிடப்பட்ட அல்லது மலையகமாக கருதப்படாத கேகாலை, இரத்தினபுரி போன்ற பிரதேசத்தின் தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ள கோப்பியோ அமைப்பிற்கு நன்றியை தெரிவித்தார். இறுதியாக நன்றியுரை தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலய அதிபர்.சா.ராஜ்குமார் வழங்கினார்.

(அவிசாவளை நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here