தேசப்பிதா நடேச அய்யரின் கனவு நனவாகும்; அமைச்சர் மனோ!

0
101

மலையகத்தில் சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிபடியாக நிறைவேறி வருகிறது.

மலையக தமிழ் மக்களில் மிகவும் பின்தங்கிய பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள் அனைவரையும், மலைநாட்டில் சொந்த காணி நிலம் கொண்ட கிராமத்தவர்களாக மாற்றி, மலையக தேசப்பிதா நடேசையரின் கனவை இலங்கை அரசையும், இந்திய அரசையும் கொண்டு, தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றியே தீரும். இதில் எவருக்கும் எந்தவித சந்தேகங்களும் வேண்டாம். அதற்கான ஆளுமையும், துணிச்சலும், தூரப்பார்வையும் எம்மிடம் இருக்கின்றன என இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை பற்றி கூறுகையில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவினர் பேச்சுகளுக்கு மேலதிகமாக எழுத்து மூலமாக சமூக, பொருளாதார, கலாச்சார கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை நோர்வுட் மைதான உள்ளக அரங்கில் நடைபெற்ற நடைபெற்ற, இந்த சந்திப்பின் போது, கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், கூட்டணி பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரவிந்த குமார், திலகராஜ், வேலு குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கப்பட்ட ஆவணத்தில் பின்வரும் விடயங்கள் அடங்கியுள்ளன.
தனி வீடமைப்பு – லயன்கள் ஒழிக்கப்பட்டு தனி வீடமைப்பு திட்டத்துக்கான மேலதிக 20,000 வீடுகளுக்கான ஒதுக்கீடு
ஆசிரிய பயிற்சி கல்லூரி – மலையக பாடசாலைகளுக்கு தேவையான விஞ்ஞானம், கணித பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க தமிழ் மொழியிலான பயிற்சி கல்லூரியும், அதற்கான கணித , விஞ்ஞான இந்திய பயிற்சியாளர்கள்
பாடசாலை உட்கட்டமைப்பு – மலையக மற்றும் தென்னிலங்கை தமிழ் பாடசாலைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு உதவிகள்
தமிழ் மொழியிலான நவீன தொழில் நுட்ப கலாசாலை – தொழில் பயிற்சி நிறுவனத்தின் அடுத்த கட்டம்
மலையக பல்கலைக்கழகம் – பிரபல இந்திய பலகலைக்கழகம் ஒன்றின் இணைவுடன் முதற்கட்ட பீடங்களை அமைத்து ஆரம்பிக்க வேண்டும்.

புலமைப்பரிசில் – “இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை” மூலமாக இன்று வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக தகைமை பெற்ற மலையக மாணவர்களுக்காக முழுமையான புலமைபரிசிலுடன் கூடிய இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி வாய்ப்பு
மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு புரிந்துணர்வு உடன்பாடு – கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் 2013ம் வருடம் இந்திய அரசிற்கும், இலங்கை அரசிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட மொழித்துறை அமைச்சுக்கும் இடையிலான மொழிகொள்கை அமுலாக்கல் தொடர்பான ஒத்தாசைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பல்லாண்டுகளாக பேசப்பட்டு, இந்த மலையக தொழிலாளர்களுக்கான வீடுகள் என்ற விடயம் மாடி வீடுகள் என்று போய் நின்று போய் இருந்தது. மகிந்த ஆட்சிக்காலத்தில், 2013, 2014 ஆண்டுகளில் வரவு செலவு திட்டத்தில் 55,000 வீடுகள் என அர்விக்கபட்டு இருந்தாலும் கூட ஒரு சதம் கூட அவற்றுக்கு ஒதுக்கப்பட வில்லை. இதற்கு இடையில் மலையகத்தில் வீடு கட்டும் பணியினை காத்திரமாக ஆரம்பித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து வந்தவர் மறைந்த பெ. சந்திரசேகரன் அவர்கள்தான்.
இந்திய அரசின் உதவியுடன் வீடுகள் கட்டும் திட்டமும் ஐந்து வருடங்களாக பேசப்பட்டு வந்தாலும் அதுவும், வீடுகள் கடும் கட்டுமான ஒப்பந்தத்தை நடைமுறையாக்குவது யார் என்று பிரச்சினையின் காரணமாக தொடர்ந்து பல்லாண்டுகள் இழுபறிப்பட்டு வந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற பிறகுதான் மலையக இந்திய வீடமைப்பு திட்டம் நடைமுறையாக தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுமட்டுமல்ல, இந்திய வீடமைக்கும் திட்ட காணிகள் தொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படாமல், சொந்த காணிகளாக அடையாளம் காணப்பட வேண்டும் என இந்திய அரசு கூறியது. அதையும் நாம் இன்று, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏழு பேர்ச் காணி என்ற அமைச்சரவை பத்திரம் மூலம் சாத்தியம் ஆக்கியுள்ளோம். இதன்பிறகுதான் இந்திய வீடமைப்பு திட்டமே ஆரம்பமாகியுள்ளது. எனவே 2015ம் வருடம் மோடி அவர்கள் இலங்கை வந்த போது 4,000 என்ற தொகை 20,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என கோரியிருந்தோம். அந்த தொகையில், 10,000 மேலதிக வீடுகள் என்ற தொகை தற்சமயம் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் தோட்ட லயன் குடியிருப்புகள் மறைந்து மலையகத்தில் புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிபடியாக நிறைவேறி வருகிறது. மலையக தமிழ் மக்களில் மிகவும் பின்தங்கிய பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள் அனைவரையும், மலைநாட்டில் சொந்த காணி நிலம் கொண்ட கிராமத்தவர்களாக மாற்றும், தேசப்பிதா நடேசையரின் கனவை தமிழ் முற்போக்கு கூட்டணி செய்து முடிக்கும்.

தமிழ் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, சிறப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைத்து அங்கே இந்திய பயிற்சியாளர்களை கொண்டு ஆசிரியர்களை பயிற்றுவிக்கலாம். உள்நாட்டில் கணித, விஞ்ஞான பட்டதாரிகள் இருப்பார்களேயானால், அவர்களை கொண்டு கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை நிரப்பலாம் என ஏற்கனவே எங்கள் கல்வி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மலையக மற்றும் தென்னிலங்கை தமிழ் பாடசாலைகளுக்கு அவசியமான கட்டிட, விஞ்ஞான கூட உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக்கொள்ள உதவிகளை கோரியுள்ளோம். தற்போது உள்ள தொழில் பயிற்சி நிறுவன் அடுத்த கட்டமாக, தமிழ் மொழியிலான நவீன தொழில் நுட்ப கலாசாலை அமைக்கப்பட வேண்டும் என்பதை கோரியிருந்தோம். இது பல்கலைக்கழகம் செல்ல முடியாத இளைஞகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை மூலமாக இன்று வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக தகைமை பெற்ற மலையக மாணவர்களுக்காக முழுமையான புலமைபரிசிலுடன் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி வாய்ப்பு முதகட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரினோம்.மலையகத்து அறிவுசார் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மலையக பல்கலைக்கழகம் அமைவதற்காக, பிரபல இந்திய பலகலைக்கழகம் ஒன்றின் இணைவுடன் முதற்கட்ட பீடங்களை அமைத்து ஆரம்பிக்க வேண்டும். நமது நல்லாட்சி அரசின் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான கொள்கை இதற்கு பயன்டுத்தபட வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில், 2013ம் வருடம் இந்திய அரசிற்கும், இலங்கை அரசிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட ஆட்சி மொழிக்கொள்கை அமுலாக்கல் மற்றும் பயிற்சிகள் தொடர்பாக இந்திய அரசிற்கும், இலங்கை அரசின் மொழித்துறை அமைச்சுக்கும் இடையிலான மொழிகொள்கை தொடர்பான ஒத்தாசைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க கோரியுள்ளோம். இன்றைய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் பணிகள் சட்டரீதியாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், மொழிக்கொள்கை அமுலாக்கல் மட்டுமல்லாமல், அமைச்சின் சகவாழ்வு துறை தொடர்பில் நாடு முழுக்க வாழும் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்படக்கூடிய வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here