தேசிய மொழிகொள்கை தொடர்பில் கனடா- இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலையில் கைச்சாத்து – அமைச்சர் மனோ கணேசன்!

0
133

 

தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்டம் என்ற பெயரில் அரசகரும மொழிகள் அமுலாக்கம், பல மொழிபேசும் இனங்களின் தேசிய சகவாழ்வு, கலாச்சார பன்மைத்தன்மை, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் ஆகியவை நாட்டின் இருமொழி பிரதேச செயலக பிரிவு, மாகாண, உள்ளூராட்சி, தேசிய மட்டங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கும் முகமாகவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாற்றலை வலுவாகும் முகமாகவும் கனடா-இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்த நோக்கங்களை நிறைவேற்றும் முகமான, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயல் திட்டங்களை முன்னெடுக்க 11,200,000 கனடிய டாலர்கள் (1250 மில்லியன் ரூபா) பெறுமதியான உதவி தொகையை கனடிய அரசு ஒதுக்கியுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கனடிய நாடு இன, மொழி பிரச்சினைகளுக்கு நாகரீக சமூகம் வியந்து மெச்சும் முறையில் தீர்வுகளை கண்டு ஒரு முன்மாதிரி நாடாக இன்று உலகில் திகழ்கின்றது. இந்த அடிப்படையில், கனடிய அரசாங்கம் நீண்டகாலமாக இலங்கையின் மொழிகளுக்கு இடையிலான சமத்துவ கொள்கை அபிவிருத்தி தொடர்பாக, தனது நாட்டின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டும், பெறுமதிமிக்க உதவிதொகைகளை வழங்கியும் வந்துள்ளது.

நமது புதிய அரசு பதவியேற்றதன் பின்னர், கனடிய அரசாங்க பிரதிநிதிகளுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலாபலனாகவும், கொழும்பில் இருக்கின்ற கனடிய உயர் ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின் காரணமாகவும், கடந்த காலங்களைவிட அதிக உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்க கனடிய நாட்டின் சார்பாக கனடிய சமஷ்டி அரசின் வெளிவிவகார அபிவிருத்தி, வர்த்தக திணைக்களம் முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக கிடைத்துள்ளது.

கனடிய தேசத்தின் இந்த உதவிகளும், ஒத்தாசைகளும், இந்த நாட்டில் இன்று புரையோடிப்போயுள்ள தேசிய இன பிரச்சினைக்கு வித்திட்ட மொழிப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு அதை தேசிய இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வின் முன்னோடியாக உருவாக்கி காட்டும் எனது கொள்கை திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். மொழிப்பிரச்சினையின் தீர்வு இனப்பிரச்சினை தீர்வின் முன்னோடி என்று நான் தொடர்ச்சியாக சொல்லி வந்துள்ளேன்.

எனினும் எனது அமைச்சுக்கு வரவு செலவு திட்டத்தில் உரிய ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக எனது திட்டங்கள் தாமதமாகி கொண்டிருந்த வேளையில், நான் மனந்தளராமல் இலங்கையின் சர்வதேச நண்பர்களுடன் பேச்சுவார்க்தைகளை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

இந்த அடிப்படையில் கனடிய அரசின் இந்த ஒத்தாசை சரியான நேரத்தில் எனது அமைச்சுக்கு கிடைக்கின்றது. இதை தொடர்ந்து மேலும் பல்வேறு சர்வதேச தோழமை அரசாங்கங்களின் உறுதியளிக்கப்பட்டுள்ள உதவிகள் எனது அமைச்சுக்கு காலக்கிரமத்தில் கிடைக்கும் என நான் திடமாக நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here