தேயிலைத் தூளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை தொடர்பாக தேயிலைத் தொழிற்சாலையொன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, திகணை, அம்பகோட்டை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திகணை பிரதேசத்தில் நேற்று விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட வழமையான சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் ரசாயனப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று மடக்கப்பட்டுள்ளது.
குறித்த லொறியின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காகவே ரசாயனங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சாரதியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலை அடுத்து சந்தேகத்திற்கிடமான தேயிலைத் தொழிற்சாலையை விசேட அதிரடிப்படையினர் திடீரென சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது தேயிலைத் தூளில் C-Sweet Liquid Glucose 01155 எனப்படும் குளுக்கோசு வகை ரசாயனம் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தேயிலைத் தூளில் கலப்பது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தேயிலை தொழிற்சாலையின் முகாமையாளரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.