தேயிலைத் தூளில் சீனி கலந்து விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளின் தேயிலைத் தூள் தயாரிப்புப் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக, இலங்கைத் தேயிலைச் சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரண்டு தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலைத் தூள் தயாரிப்புப் பணிகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இலங்கைத் தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்படுவதாக, கடந்த காலங்களில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த தேயிலைச் சபை, இரத்தினபுரியிலுள்ள இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகளைச் சோதனைக்கு உட்படுத்தியது. இதன்போதே, தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவது ஊர்ஜிதமாகியதென, தேயிலைச் சபை அறிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலைகளில் சீனியைச் சூடாக்கி தேயிலையுடன் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தேயிலைக்கான ரஷ்யாவின் தடைவிதிப்பு, தற்போதே நீங்கப்பட்டுள்ள என்பதைச் சுட்டிக்காட்டி அவர், இவ்வாறான நிலையில் மீண்டும் இலங்கைத் தேயிலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர் என விசனம் வெளியிட்டார்.