தேயிலை உற்பத்தி சிறந்த மட்டத்தில் காணப்படுகிறது: ரமேஷ் பத்திரண

0
91

தேயிலை உற்பத்தியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சிறந்த மட்டத்திலேயே காணப்படுகிறது என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு தேயிலை உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது.

கடந்த ஆண்டு இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விளைச்சல் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது, ஆனால் இவ்வாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.

தேயிலை தோட்ட மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு கிடைக்கும் இலாபம் தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

அதற்கமைய, தேயிலை உற்பத்திக்காக வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு தேயிலை சபையால் வழங்கப்படும் நிதியின் ஊடாக தேயிலை தொழிற்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீரிழிவு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இரசாயன உரப் பாவனைக்கு தடை விதித்தார்.எவ்வாறிருப்பினும், இது தொடர்பில் எம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும், தீர்மானத்தை செயற்படுத்தும்போது ஏற்பட்ட சிக்கல்களால் இறுதியில் முழு நாடும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிகளவான தேயிலை விளைச்சல் பெறப்பட்டது.அவ்வாண்டில் 340 மில்லியன் கிலோ விளைச்சல் பெறப்பட்டது, 2015இல் இந்த நிலைமையை மீண்டும் அடைய முடிந்தது.

அதன் பின்னர் படிப்படியாகக் குறைவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 – 270 மில்லியன் கிலோ விளைச்சலைப் பெற முடிந்துள்ளது, இவ்வாண்டிலும் 270 மில்லியன் கிலோ விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here