அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா மாதாந்த நிவாரணக் கொடுப்பனவு அரசாங்க ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 கிலோ கோதுமை மா வழங்கப்படும் என்று வெளியான அறிவிப்பு இதுவரை நடைமுறை நடைமுறைக்கு வராதிருப்பது உழைக்கும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், சமையல் எரிவாயு, பால்மா உட்பட முக்கிய பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவற்றைக் கருத்திற் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வீதம் ஒரு வருடத்துக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தோடு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியம் பெறுகின்ற அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த மாத நிலுவையோடு, இம்மாத ஓய்வூதியத்தோடு சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்க விடயம் ஆகும்.
அதேநேரம், தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமையை உணர்ந்து மாதாந்தம் ஒரு கிலோ 80 ரூபா என்ற அடிப்படையில் தலா 15 கிலோ கோதுமை மாவை நிவாரணமாக வழங்கப் போவதாக உறுதியளித்திருந்தது. மேலும், கோதுமை மா 5 ஆந் திகதி கிடைக்கவுள்ளதாக மலையக அரசியல்வாதிகள் ஊடக சந்திப்புகளில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை. இது கோதுமை மாவை எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மலையகத்தில் குறிப்பிடத் தக்க அபிவிருத்திப் பணிகள் எதனையும் ஏற்படுத்தவில்லை. வீடமைப்பு, பல்கலைக்கழகம் அமைத்தல் எல்லாமே வெறும் அறிக்கைகளாகவே இருந்து வருகின்றன. அதேபோல்தான் கோதுமை மாவுக்கான அறிவிப்பும் இருந்து விடுமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்பிரல் மாதம் அறிவிக்கப்பட்ட 1000 ரூபா சம்பள அதிகரிப்பு இன்று வரை கிடைக்கவில்லை. தோட்டங்களில் வேலை நாட்களும் குறைவாகவே உள்ளது. வேலைப் பளுக்களும் அதிகரித்துள்ளன. நிர்வாகங்களின் கெடுபிடிகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள். ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 150 ரூபாவை எட்டி விட்டது. அரிசியின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் அறிவித்த 15 கிலோ கோதுமை மாவின் மூலம் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம் என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதுவும் கைகூடாமல் உள்ளது. எனவே, அரசாங்க ஊழியர்களுக்கு 5000 ரூபாவை வழங்கியுள்ளது போல, நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்து அறிவிப்பட்ட 15 கிலோ கோதுமை மாவை காலம் தாழ்த்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.