தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு அறிவித்தல் விடுப்பு

0
98

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான இயக்குநர் ஜொனி சிம்ப்சனிற்கும், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு அமைச்சில் (08.04.2024) மாலை நடைபெற்றது.

மேற்படி சந்திப்பின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நகர்வுகள் பற்றி மேற்படி பிரதிநிதிகளிடம் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்தார். அத்துடன், இது விடயத்தில் உள்ள சவால்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தாம் கூடுதல் கரிசணை கொண்டுள்ளதாகவும் சர்வதேச பிரதிநிதிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளனர்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான சட்ட ஆலோசகர் கா.மாரிமுத்து, உப தலைவரும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, உப தலைவரும், சிரேஷ்ட இயக்குநர் – தொழில் உறவு அதிகாரியுமான எஸ்.ராஜமணி ஆகிய இ.தொ.கா பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். திருமதி.பிரமோ, திரு.தசுன் கொடிதுவக்கு ஆகியோர் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here